இருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன
மருப்பிலே பயின்ற பாவைம ருங்கிலே வளருகின்றாள். (1)
பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து
இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை-
நெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.
![]() |
Varaha-Earth-Villibharatham- வில்லிபாரதம் |
அகத்தியன் பயந்த செஞ்சொ லாரணங் கம்புசாதன்
முகத்தினில் வாழுமந்த மொய்க்குழ லருளினாலே
பகைத்தெதிர் பொருததெய்வப் பாரதக்கதை யிம்முந்நீர்ச்
செகத்தினில் விருத்த யாப்பாற் செய்கெனச் செய்தன்றே. (2)
அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு, அம்புசாதன்
முகத்தினில் வாழும் அந்த மொய்க்குழல், அருளினாலே,
பகைத்து எதிர் பொருத தெய்வப் பாரதக் கதை, இம் முந்நீர்ச்
செகத்தினில், விருத்த யாப்பால் செய்க!' என, செய்தது அன்றே.
![]() |
Agathiyar - Villibharatham அகத்தியர் - வில்லிபாரதம் |
தேடினா ரியாவரேகொ லெழுவகையானுஞ் சீர்த்தி
நீடினா ரவரேயென்பர் நீணிலத் துயர்ந்த மாந்தர்
பாடினா ரியாவர்யாவர் பாடுவித்தார் கொலென்று
நாடினார் தெளியும்வண்ணம் நவையற நவிலலுற்றேன். (3)
'தேடினார் யாவரேகொல், எழு வகையானும் சீர்த்தி'
நீடினார் அவரே! எனபர், நீள் நிலத்து உயர்ந்த மாந்தர்;
'பாடினார் யாவர்' யாவர் பாடுவித்தார் கொல்'' என்று
நாடினார் தெளியும்வண்ணம், நவை அற, நவிலலுற்றேன்.
ஏழுவகையால்[1] கீர்த்தியைத் தேடுவோரே எல்லைகளைக் கண்டவர்கள் என்பார்கள் இந்த நீண்ட நிலத்தில் உயர்ந்தவர்களாக இருக்கும் மக்கள். யார் யார் இதைப் பாடினார்கள், பாடச்செய்தவர் எவர் என்று நாடுவோர் தெளியும் வண்ணம் குற்றமில்லாமல் சொல்லப்போகிறேன்.
[1] தடாகப் பிரதிஷ்டை {குளம் வெட்டுதல்}, தநநிக்ஷேபம் {செல்வக்குவியல்}, அக்கிரகாரப் பிரதிஷ்டை {பிராமணர்களுக்கான வசிப்பிடததைக் கட்டுதல்}, தேவாலய பிரதிஷ்டை {கோவில் கட்டுதல்}, நந்தவன பிரதிஷ்டை {பூங்கா அமைத்தல்}, பிரபந்தநிர்மாணம் {பல்வேறு நூல்களைக் கொண்ட இடத்தை அமைத்தல்}, ஸத்திரபிரதிஷ்டை {பயணிகள் ஓய்வெடுக்கும் இடங்களைக் கட்டுதல்} என்பவையே அவ்வேழு வகைகள்
நாணிரைத்த நேகதாரகாகணமா நவமணியுட னவவிதங்கொள்,
கோணிரைத் தீரேழ்புவனமும் வலஞ்செய் கொற்றநேமியின் வருகொண்டல்,
வாணிரைத் திரவிவிதிர்ப்ப போன்மின்னி வான்முகடுற நெடும்பளிக்குத்,
தூணிரைப் பனபோனந்திமால்வரையின் சூழலிற்றாரைக் கொண்டதுவே. (4)
நாள் நிரைத்து, அநேக தாரகாகணம் ஆம்
நவ மணியுடன் நவ விதம் கொள்
கோள் நிரைத்து, ஈர்-ஏழ் புவனமும் வலம் செய்
கொற்ற நேமியின் வரு கொண்டல்,
வாள் நிரைத்து இரவி விதிர்ப்பபோல் மின்னி,
வான் முகடு உற நெடும் பளிக்குத்
தூண் நிரைப்பனபோல், நந்தி மால் வரையின்
சூழலில் தாரை கொண்டதுவே.
நாட்களை ஒழுங்காக உண்டாக்கும் விண்மீன்கூட்டளெனும் நவரத்தினங்களுடனும், ஒன்பது வகையான கோள்களுடனும் கூடிய ஈரேழு உலகமும் வலம் வரும் மேரு மலையைப் போன்ற நீர்நிறைந்த மேகமானது, சூரியனைப் போன்ற பேரொளி படைத்த வாளைப் போல் மின்னி, வானைத் தொடும் நெடும் பளிங்குத் தூண் போல, நந்திமால்வரையின் {குடகு மலையின்} சூழலில் மழைத்தாரையைப் பொழிந்தது. {இது நூலாசிரியர் பிறந்த திருமுனைப்பாடி நாட்டைப் பற்றிய கூற்று என்று சொல்லப்படுகிறது}.
வம்பறாமலருஞ்செம்பொனுமணியுமருங்கெலாநெருங்குமக்குன்றின்,
உம்பரார்ப்பெழப்பாரளவுநின்றோங்கியுள்ளுறத்துள்ளிவீழருவி,
அம்புராசியைமான்மந்தரஞ்சுழற்றியமுதெழக்கடைந்தநாளதற்குத்,
தம்பமாமதியையதனுடன்பெயர்த்துச்சார்த்திவைத்தென்னலாந்தகைத்தே. (5)
வம்பு அறா மலரும், செம் பொனும், மணியும்,
மருங்கு எலாம் நெருங்கும் அக் குன்றின்.
உம்பர், ஆர்ப்பு எழ, பார் அளவும் நின்று ஒங்கி,
உள்ளுறத் துள்ளி, வீழ் அருவி-
அம்புராசியை மால் மந்தரம் சுழற்றி,
அமுது எழக் கடைந்த நாள், அதற்குத்
தம்பமாம் மதியை அதனுடன் பெயர்த்துச்
சார்த்தி வைத்தென்னலாம் தகைத்தே.
நறுமணவற்றாத மலரும், செம்பொன்னும், மணியும் சுற்றிலும் நிறைந்த அக்குன்றின் {குடகு மலையின்} மேலிடத்தில் பேரொலி எழ, உலகம் அளவுக்கு பெரிதாகக் கண்டோர் வியக்கும் வண்ணம் துள்ளி வீழும் அருவியானது, பாற்கடலைத் திருமால் மந்தர {மலை} சுழற்றி அமுதம் உண்டாவதற்காகக் கடைந்த நாளில், அழகான நிலவை அதனுடன் பெயர்த்து {மலையோடு} சார்த்திச் சுற்றிக் கட்டி வைத்தது போல இருக்கிறது எனலாம்.
வெண்ணெயேகமழும்பவளவாய்விமலன்மெய்யெனக்கருகிமெல்லியலார்,
கண்ணையேயனையநெடுங்கடன்முகந்துககனமுந்திசைகளும்விழுங்கிப்,
பண்ணைசூழ்ந்திலகுந்திருமுனைப்பாடிப்பழையநாடனைத்தையுமொருதன்,
பெண்ணையேகொண்டுபோகமுய்த்திடுமாற்புயலெனும்பெயருடைப்பெரியோன். (6)
வெண்ணெயே கமழும் பவளவாய் விமலன்
மெய் எனக் கருகி, மெல்லியலார்
கண்ணையே அனைய நெடுங் கடல் முகந்து,
ககனமும் திசைகளும் விழுங்கி,
பண்ணை சூழ்ந்து இலகும் திருமுனைப்பாடிப்
பழைய நாடு அனைத்தையும், ஒருதன்
பெண்ணையே கொண்டு போகம் உய்த்திடுமால்,
புயல் எனும் பெயருடையப் பெரியோன்.
வெண்ணெய் மணம் வீசும் பவளம் போன்ற வாயைக் கொண்ட விமலனின் {திருமாலின்} உடலைப் போலக் கருகி, பெண்களுடைய கண்களின் தன்மையைக் கொண்ட நெடுங்கடலை அள்ளிக் கொண்டு, ஆகாயத்தையும், திசைகளையும் விழுங்கும் கரிய புயலெனும் பெயருடைய பெரியோன், வயல் சூழ்ந்து ஒளிரும் திருமுனைப்பாடி பழைய நாடு அனைத்தையும் பெண்ணையாற்றைக் கொண்டு இன்புறச் செய்கிறான். (மேகம் பொழிவதால் நந்திமலையில் அருவி பெருகி பின்னர் பெண்ணை நதியாகி திருமுனைப் பாடி நாட்டில் பாய்வது குறிப்பிடப்படுகின்றது).
தொடுத்தநாண்மலர்வேய்ந்தகிலளைந்துந்திச்சுழிவயினிலங்கமெய்த்தனங்க,
ளெடுத்துமேல்வீசிமணிமருங்கலையைவினங்கொள்வண்டொடுசிலம்பிரங்க,
அடுத்தநீள்சுரதமகளிரிற்றடங்கணிறஞ்சிவப்புறக்கரையழிந்து,
படுத்தபேரணைப்போர்புரிந்ததாலந்தப்பண்ணையங்கானல்சூழ்பெண்ணை. (7)
தொடுத்த நாள்மலர், வேய்ந்து, அகில் அளைந்து, உந்திச்
சுழிவயின் இலங்க, மெய்த்தனங்கள்
எடுத்து மேல் வீசி, மணி மருங்கு அலைய,
இனம் கொள் வண்டொடு சிலம்பு இரங்க,
அடுத்த நீள் சுரத மகளிரின் தடங் கண்
நிறம் சிவப்புற, கரை அழிந்து,
படுத்த பேர் அணைப் போர் புரிந்ததால்- அந்தப்
பண்ணை அம் கானல் சூழ் பெண்ணை.
தொடுத்து வைத்த மலரைத் தினமும் சூடி, அகில் தடவி, வயிற்றில் உள்ள தொப்புள் ஒளிர, கொங்கைகள் மற்றும் இடையின் மேல் மணி ஆபரணங்களை வீசி, கைவளையும், சிலம்பும் ஒலியெழுப்ப வரம்பு கடந்து வரும் நீள் சுரத மகளிரின் {வேசியரின்} அகன்ற விழிகளின் நிறம் சிவந்ததுபோல, {மலர்மணந்து, அகில் வளர்ந்து, பள்ளத்தாக்குகள் எங்கும் ஒளிர, உண்மையான பொன், மணிகளை அக்கம்பக்கத்தில் சிதற அவற்றின் ஒலி மலைகளில் எதிரொலி செய்யச் பெண்ணையாற்று நீர்நிலைகளின் கரை கடந்து செம்மையாகக்} கட்டப்பட்டுள்ள பெரிய அணையில் போர் நடந்ததால் அந்தப் வயல்களும், சோலைகளும் சூழ்ந்த பெண்ணை ஆறும் சிவந்தது.
அவ்வைபாடலுக்குநறுநெய்பால்பெருகியருந்தமிழறிவினாற்சிறந்து,
பௌவநீராடைத்தரணிமான்மார்பிற்பயிலுமுத்தரியமும்போன்று,
மொய்வரால்கெண்டைவாளைசேன்மலங்குமுதலியசனமெதிர்கொள்ளத்,
தெய்வமாநதிநீர்பரக்குநாடந்தத்திருமுனைப்பாடிநன்னாடு.(8)
அவ்வை பாடலுக்கு நறு நெய் பால் பெருகி,
அருந் தமிழ் அறிவினால் சிறந்து,
பௌவ நீர் ஆடைத் தரணிமான் மார்பில்
பயிலும் உத்தரியமும் போன்று,
மொய் வரால், கெண்டை, வாளை, சேல், மலங்கு,
முதலிய சனம் எதிர்கொள்ள,
தெய்வ மா நதி நீர் பரக்கும் நாடு அந்தத்
திருமுனைப்பாடி நல் நாடு.
அவ்வையின் பாடலுக்கு மணம்வீசும் நெய்யும் பாலும் பெருகியதால், அருமையான தமிழ் அறிவினால் சிறந்தவளும், கடலெனும் நீராடை போலவும், உலகையாள்வோன் மார்பில் தவழும் மேலாடை போலவும் இருப்பவளும், வரவேற்பதற்கு மொய், வரால், கெண்டை, வாளை, சேன்மலங்கு முதலிய மக்களைக் {மீன்களைக்} கொண்டவளும், தெய்வீகமானவளுமான அந்தப் பெரும் நதியின் {பெண்ணை ஆற்றின்} நீர் பரந்திருக்கும் நாடாகும் அந்தத் திருமுனைப்பாடி நன்நாடு.
பாவருந்தமிழாற்பேர்பெறுபனுவற்பாவலர்பாதிநாளிரவின்
மூவருநெருக்கிமொழிவிளக்கேற்றிமுகுந்தனைத்தொழுதநன்னாடு
தேவருமறையுமின்னமுங்காணாச்செஞ்சடைக்கடவுளைப்பாடி
யாவருமதித்தோர்மூவரிலிருவர்பிறந்தநாடிந்தநன்னாடு.(9)
பா அருந் தமிழால் பேர் பெறு பனுவல்
பாவலர், பாதி நாள் இரவில்,
மூவரும் நெருக்கி, மொழிவிளக்கு ஏற்றி,
முகுதனைத் தொழுத நல் நாடு;
தேவரும் மறையும் இன்னமும் காணாச்
செஞ் சடைக்கடவுளைப் பாடி,
யாவரும் மதித்தோர் மூவரில், இருவர்
பிறந்த நாடு, இந்த நல் நாடு.
செய்யுளுக்குரிய அருந்தமிழால் பெயர் பெற்ற நூலைப் படைத்த கவிஞர்கள் மூவரும் {பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகிய மூவரும்} பாதிநாள் இரவில் மொழி விளக்கேற்றி முகுந்தனை {திருமாலைத்} தொழுதது இந்த நன்னாடு. தேவர்களும், வேதமும் இன்னும் காண முடியாத செஞ்சடைக் கடவுளை {சிவனைப்} பாடி, யாவராலும் மதிக்கப்படும் மூவரில் இருவர் {தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகிய மூவரில் திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய இருவர்} பிறந்த நாடு இந்த நன்னாடு {திருமுனைப்பாடி நாடு}.
அந்தத்திருநாட்டந்தநதி யமுதம்பெருகியிருகரையுஞ்
சந்தத்துடன்காரகில்கமழத்தடங்காவகஞ்சூழ்தடநிறைப்பக்
கந்தக்குவளைமேய்பகட்டின்காலானெரிந்துகதிர்முத்தஞ்
சிந்தச்சிந்தக்கொழுமுனைக்குமுன்னேருழுவசெய்ச்சங்கம்.(10)
அந்தத் திருநாட்டு, அந்த நதி அமுதம் பெருகி, இரு கரையும்
சந்தத்துடன் கார் அகில் கமழ, தடங் கா அகம் சூழ் தடம் நிறைப்ப,
கந்தக் குவளை மேய் பகட்டின் காலால் நெரிந்து, கதிர் முத்தம்
சிந்தச் சிந்த, கொழு முனைக்கு முன் ஏர் உழுவ, செய்ச் சங்கம்.
அந்தத் {திருமுனைப்பாடி எனும்} திரு நாட்டின், அந்த {பெண்ணை எனும்} ஆற்றில் நீர் பெருகுவதால், சந்தனமும், கரிய அகிலும் அதன் இரு கரைகளிலும் கமழ்ந்திருக்கின்றன. பெரும் சோலை சூழ்ந்திருக்கும் தடாகத்தில் நிறைந்திருக்கும் நறுமணமிக்கக் குவளை மலர்கள், எருமைக்கடாவின் கால்களால் நெரிக்கப்படுவது போல, சூரியன் முத்தம் சிந்தச் சிந்த கலப்பை முனையால் ஏர் உழும்போது கழனியில் உள்ள சங்கு பூச்சிகள் நெரிக்கப்படுகின்றன.